தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேச்சு
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) கொழும்பில் இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக இலங்கைக்கு மேற்கொண்டுள்ள அவரது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்கட்டுமானம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக பேசப்பட்டது.
அனர்த்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளச் சீரமைப்பதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளையும், தொடர்ந்தும் வழங்கவுள்ள ஆதரவையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இச்சந்திப்பில் வலியுறுத்தினார்.
குறிப்பாக, மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு வசதிகளின் மீளமைப்பு மற்றும் சமூக பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் உறுதியான பங்களிப்பு தொடரும் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள், டித்வா சூறாவளியால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கான உடனடி நிவாரணம் முதல் நீண்டகால புனர்வாழ்வு வரை இந்தியா வழங்கி வரும் உதவிகளுக்கு நன்றியை தெரிவித்தனர். அத்துடன், அண்டை நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு பாதிக்கப்பட்ட சமூகங்களின் நலனுக்கு மிக அவசியமானது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்தச் சந்திப்பு, அனர்த்தத்திற்குப் பின்னரான இலங்கையின் மீள்கட்டுமானப் பயணத்தில் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழ் அரசியல் தரப்புகளுக்கிடையிலான கலந்துரையாடல்களையும் பரஸ்பர புரிதலையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இந்த சந்திப்பில் எம். ஏ. சுமந்திரன், ஸ்ரீதரன், சீ.வி. கே. சிவஞானம், சித்தார்த்தன், சாணக்கியன், சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.




Post a Comment